Saturday, August 21, 2010

தவறுகளைக் கொண்டாடுவோம்!

''தமிழ்நாட்டிலிருந்து நிறைய பிஸினஸ்மேன்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என பலமுறை யோசித்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த ஒரே காரணம், தவறு செய்துவிடுவோமோ என்று பயப்படும் நம் குணாதிசயம்தான். பிஸினஸில் தவறு செய்தால் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அத்தனையும் பறிபோய்விடுமோ என்கிற பயம்தான் பலரையும் பிஸினஸ் பக்கமே தலைவைத்துப் படுக்காதபடிக்குத் தடுத்துவிடுகிறது. உள்ளபடி பார்த்தால், தவறு செய்யாமல் எந்த ஒரு புதிய விஷயத்தையும் கற்றுக் கொள்ள முடியாது. தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்துக்குச் செல்லும் மனப்பக்குவத்தை நாம் பெற வேண்டும். தவறுகளைக் கொண்டாடும் மனப்பான்மை நமக்கு வந்தால்தான் நம் அடுத்த தலைமுறையையாவது உலகளாவிய பிஸினஸ்மேன்களாக மாற்ற முடியும்'' - முக்கியமான விஷயத்தை நெத்தியடியாக எடுத்துச் சொல்கிறார் கே.பி. சந்திரசேகர்.
'சந்திரா' என பிஸினஸ் வட்டாரத்தில் செல்லமாக அழைக்கப்படும் சந்திர சேகர், அமெரிக்காவில் வாழும் தமிழ்த் தொழிலதிபர். இதுவரை ஐந்துக்கும்  மேற்பட்ட கம்பெனிகளைத் தொடங்கி நடத்தும் இவர் ஒரு தொடர் தொழில் முனைவர். பெங்களூருவில் இவர் நடத்தும் 'ஜாம்கிராக்கர்' என்கிற ஐ.டி. நிறுவனம், க்ளவுட் கம்ப்யூட்டிங் துறையில் வெற்றிநடை போடுகிறது. அண்மையில் சென்னை வந்திருந்த அவரைச் சந்தித்தோம். உற்சாகம் பொங்க பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார் அவர்.
''என் சொந்த ஊர் கும்பகோணம் என்றாலும், நான் படித்ததெல்லாம் சென்னையில்தான். கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு பங்குச் சந்தையை அறிமுகப்படுத்தினார் என் அப்பா. அப்போதே சில பங்குகளை வாங்கி, ஏ.ஜி.எம்.முக்கு போய் கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறேன். கம்பெனிகளின் லாப-நஷ்டங்களை அப்போதே எனக்கு அலசத் தெரிந்ததால் பிஸினஸ் பிளான் எழுதவும் தெரிந்து கொண்டேன். பஸ் கண்டக்டர்களுக்கு பயன்படுகிற மாதிரி கால்குலேட்டருடன் கூடிய ஒரு பஞ்சிங் மெஷினை உருவாக்குவது பற்றி ஒரு பிஸினஸ் பிளானை எழுதி கேசியோ நிறுவனத்துக்கு அனுப்பினேன். கொரியா, தைவான் நாடுகளிலிருந்து எலெக்ட்ரானிக் விளையாட்டுப் பொம்மைகளை இறக்குமதி செய்து விற்பது பற்றி இன்னொரு பிஸினஸ் பிளான் தயார் செய்தேன். ஆனால் அப்போது எங்களிடம் பணமில்லை. தவிர, எங்கள் குடும்பத்திலிருந்து அதுவரை பிஸினஸில் யாரும் நுழைந்ததில்லை. எனவே நானும் நல்ல பிள்ளையாக படித்து விட்டு, வேலைக்குப் போனேன்.
1983-ல் விப்ரோவில் வேலைக்குச் சேர்ந்தேன். விப்ரோ என் திறமைக்கு விருந்து போட்டதோடு எனக்குள் அடங்கிக் கிடந்த பிஸினஸ்மேனையும் தட்டி எழுப்பியது. 1990-ல் என்னை அமெரிக்காவுக்கு அனுப்பியது விப்ரோ. அங்கு இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு வேலையை விட்டுவிட்டு பிஸினஸ் தொடங்க முடிவு செய்தேன். இத்தனைக்கும் அப்போது என்னிடம் இருந்தது வெறும் 4,500 டாலர் மட்டுமே! அதை வைத்து அதிகபட்சம் 45 நாட்களை மட்டுமே ஓட்ட முடியும். 'கவலைப்படாமல் இறங்குங்கள்' என்று சொல்லிவிட்டார் என் மனைவி. சரி என்று நானும் ஒரு கம்பெனியை ஆரம்பித்து, இரண்டு வாரம்கூட ஆகவில்லை. அதற்குள் எனக்கு அம்மை வந்துவிட்டது. வெளியே எங்கேயும் போக முடியாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம். கையிலிருக்கிற பணம் தீருவதற்குள் மீண்டும் சம்பாதித்தாக வேண்டும் என்கிற கட்டாயம். நான் துவண்டுவிடவில்லை. வீட்டில் இருந்தபடி போனில் பேசி, ஆர்டர் வாங்கி, அவர்கள் சொன்ன வேலையைச் செய்து கொடுத்தேன்.
என் நண்பர்கள் இருவர் செய்த உதவியால் அந்த கம்பெனியை ஒரே வருஷத்தில் நன்றாக வளர்த் தெடுத்தேன். அந்த ஒரு வருஷத்தில் என் மனைவி ஒரு புதுச்சேலைகூட வாங்கவில்லை. என் இரண்டு குழந்தைகளோடு மிகச் சிக்கனமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தோம். இத்தனைக்கும் 80 ஆயிரம் டாலர் சம்பளத்தில் வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் அப்போது என் கையில் இருந்தது. ஆனாலும் பிஸினஸில் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறிதான் எனக்குள் இருந்தது. பிஸினஸில் ஜெயிப்பதற்கு தேவை தணியாத வெறியே ஒழிய பணமல்ல என்பதற்கு நானே ஓர் உதாரணம்'' - நம்பிக்கை பொங்கப் பேசினார் சந்திரா.
''பிஸினஸ் எப்படிச் செய்ய வேண்டும் என நான் எந்தக் கல்லூரியிலும் படித்ததில்லை. ஏதோ ஒரு ஆர்வத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் நானேதான் பட்டுபட்டுத் தெரிந்து கொண்டேன். எத்தனையோ முறை தவறு செய்திருக்கிறேன். ஆனால் ஒரு போதும் தவறே செய்யக்கூடாது என்று நான் நினைத்ததில்லை. உதாரணமாக, ஒரு சம்பவம். 1993-ல் எக்சோடஸ் கம்யூனிகேஷன்ஸ் என்கிற இன்டர்நெட் நிறுவனத்தை ஆரம்பித்தேன். அப்போதுதான் அமெரிக்காவிலேயே இன்டர்நெட் புழக்கத்துக்கு வந்துகொண்டிருந்தது. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த நிறைய பணம் தேவைப்பட்டது. ஆனால் யாரும் கடன் கொடுக்கத் தயாராக இல்லை. என்னால் ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம்கூட கொடுக்க முடியாத அளவுக்கு கஷ்டமான சூழ்நிலையில் நான் பெரிய தவறு செய்துவிட்டதாக நினைத்து அழுதேன். ஆனால் பொறுமையோடு கஷ்டப்பட்டு உழைத்ததால் அதிலிருந்து மீண்டுவர முடிந்தது'' - உணர்ச்சி பொங்கப் பேசுகிறார் சந்திரா.
''தவறு செய்வதால் வாழ்க்கையின் அதல பாதாளத் துக்கு போய்விடுவோம் என்று கவலைப் படுகிறோம். அப்படிப் போனாலும் அங்கிருந்து நம்மைத் தூக்கிவிட யாராவது ஒருவர் முன்வராமல் போய்விட மாட்டார்கள். அப்படி ஏதாவது ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைக்காமல் போய்விடாது. பிஸினஸில் ஏதாவது நாம் ஒரு தவறு செய்து இரண்டு அடி சறுக்கினால் ஐந்து அடிக்கு முன்னேறப் போகிறோம் என்று அர்த்தம். எனவே தவறு செய்தால் அதோடு நம் வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைக்க வேண்டியதில்லை.
இப்படிச் சொன்னால், மனிதர்கள் நிறைய தவறு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை அது தவறு. காரணம், தவறு செய்வது மனித இயல்பு அல்ல. ஒருமுறை தடுக்கி விழுந்த மனிதன் அந்த இடத்துக்கு அடுத்தமுறை வரும்போது கவனமாக இருப்பான். ஒருமுறை தீயைத் தொட்டு சுட்டுக் கொண்டவன் மீண்டும் அதை வெறும் கையால் தொட மாட்டான். ஒருமுறை பிஸினஸில் இழப்பு வந்தால், அடுத்தமுறை கவனத்தோடு அந்த விஷயத்தை கவனிப்பான். தவறிலிருந்து எந்த விதமான பாடத்தையும் கற்றுக் கொள்ளாதவர்களே செய்த தவறையே திரும்பத் திரும்ப செய்து தோற்றுப் போகிறார்கள்.
நாம் செய்யும் தவறு எதுவானாலும் அதை மறைப் பதற்குப் பதில், எந்தச் சூழ்நிலையில் அந்தத் தவறை செய்தோம், மீண்டும் அந்தத் தவறை செய்யாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உணர வேண்டும். அப்படி உணர்ந்தால் மீண்டுமொரு முறை அதே தவறைச் செய்ய மாட்டோம். பிஸினஸில் தவறுவதில் தவறே இல்லை. சின்ன சின்ன தவறுகளைச் செய்தாலும் பிற்பாடு பெரிய அளவில் சரியான காரியங்களை செய்யப் போகிறோம் என்கிற நம்பிக்கை நமக்குள் உருவாக வேண்டும். தவறுகளை மூடி மறைப்பதைவிட அதனைப் புரிந்து கொண்டு கடந்து போவதே சரி.'' - குதூகலமாகப் பேசி முடித்தார் சந்திரா.
thks
vikatan

Tuesday, August 10, 2010

தலைகீழ் விகிதங்கள்

ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை விட, இந்த அதிகாரிகள், இச்சமுதாயத்தின் புற்று நோய் என்று சவுக்கு எப்போதுமே சொல்லி வந்திருக்கிறது.

ஊழல் செய்யும் அரசியல் வாதிகள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தலித்துகள் வீட்டிலும், சேரிகளிலும், ஏழைகள் வீட்டுக்கும் வந்தே ஆக வேண்டும். அவர்களை சில சமயங்களிலாவது, கேடும் கோபம் கொண்டு, மக்கள் நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த அதிகாரிகளுக்கு எந்த தண்டனையும் கிடையாது. பச்சோந்திகள் போல பதவிக்கு வரும் ஆட்சியாளர்களுக்கு வால் பிடித்து தங்கள் பிழைப்புக்கு எந்த விதத்திலும் குந்தகம் விளையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

தமிழகத்தில் பெரிய அளவில் அதிகாரிகள் மட்டத்தில் ஊழல் தொடங்கியது 1991க்குப் பிறகு தான். அதற்கு முன்னாலும் ஊழல் இருந்ததென்றாலும், சகட்டு மேனிக்கு சகல மட்டத்திலும் ஊழல் புரையோடிப் போனது 1991 முதல் தான். 

பஞ்சாயத்துக்காக வாங்கும் தொலைக்காட்சி வாங்குவதில் ஊழல் என்றால், நிலக்கரி இறக்குமதி செய்வதில் ஊழல், தொட்டில் குழந்தைக்கு மோதிரம் வழங்குவதில் தொடங்கி சுடுகாட்டுக் கூரை வரை ஊழல் வானளாவிக் கிடந்தது.

அன்று தொடங்கிய ஊழல் இன்று கொடி கட்டிப் பறக்கிறது. ஊழல்களில் ஈடுபட்டவர்களில் ஓரிருவர் தண்டிக்கப் பட்டாலும், பெரும்பாலானவர்கள் இன்று அதிகார மட்டத்தில் அதிகாரம் செலுத்திக் கொண்டு இருக்கும் அவலம் இருக்கத் தான் செய்கிறது.

சி.ராமச்சந்திரன் என்று என்று ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருந்தார். இவருக்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 4 பதவி நீட்டிப்புகள் கொடுக்கப் பட்டன. 1996ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், முதலில் பணி இடை நீக்கம் செய்யப் பட்ட ஐஏஎஸ் அதிகாரி இவர்தான்.

இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் 1996ல் பதியப் பட்டன. சிபி.சிஐடியில் ஒரு 5 வழக்குகள். இவர் மீத இத்தனை வழக்குகள் பதியப்பட்டதற்கு காரணம், மனிதர் கையெழுத்துப் போட சளைக்க மாட்டார். யாராவது ஒரு நாள் லீவ் வேண்டுமென்று கேட்டால் கூட பணம் கேட்பார் என்று தலைமைச் செயலக வட்டாரங்களில் இவரைப் பற்றி நகைச்சுவையாக சொல்வதுண்டு. 

திமுக ஆட்சியில் இவர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

இன்று இந்த சி.ராமச்சந்திரன் எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா ?

உமாசங்கர் என்ற ஐஏஎஸ் அதிகாரி, திடீரென்று பணி இடை நீக்கம் செய்யப் பட்டார். அவர் இடை நீக்கம் செய்யப் பட்டதற்கு காரணம் மாறன் சகோதரர்களின் எஸ்சிவி நிறுவனம்தான் என்று பரவலாக பேசப்பபடுகிறது. 

ஆனால் உண்மையான மதுரையில் உள்ள அதிகார மையம் தான். எல்காட்டும், நியூ எரா டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனமும் கூட்டு சேர்ந்து “எல்நெட்” என்ற புதிய நிறுவனத்தை கூட்டாக உருவாக்குகின்றன. இந்த எல்நெட் நிறுவனம், ”ஈடிஎல்” என்ற கட்டுமான நிறுவனத்தை புதிதாக, தனியாக உருவாக்குகிறது. உருவாக்கி, எல்நெட் நிறுவனத்தின் சொத்துக்களை அடமானம் வைத்து, ஏறக்குறைய 700 கோடிகளை கபளீகரம் செய்து விட்டு காணாமல் போகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உமாசங்கரின் சாதிச் சான்றிதழ் கேள்விக் குறியாக்கப் படுகிறது. அவர் பணி இடைநீக்கம் செய்யப் படுகிறார்.

இந்த எல்நெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருப்பவர் ”சி.ராமச்சந்திரன்”. மதுரை அதிகார மையம் காணாமல் போன அந்த நிறுவனத்தின் 60 சதவிகித பங்குகளை வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எப்படி இருக்கிறது ?

2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்த உடன், திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மேல் லஞ்ச ஒழிப்புத் துறையால் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்குகளில் மிகத் தீவிரம் காட்டி, வேகமாக இறுதி அறிக்கையை சமர்ப்பிக்காத புலனாய்வு அதிகாரிகளை கடுமையாக சாடியவர் கே.ராதாகிருஷ்ணன். 

அப்போது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் முக்கியமாக கவனம் செலுத்தப் பட்ட வழக்கு, ஆற்காடு வீராச்சாமி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு. இந்த வழக்கில், ஆற்காட்டாரின் தம்பி தேவராஜன் எழுபதுகள் முதல் தொடர்ந்து வருமான வரி செலுத்தி வந்த கணக்குகளால் இவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. இதனால், ஆற்காட்டார் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய இயலாது என்று அந்த புலனாய்வு அதிகாரி கூறி விட்டார்.

இந்த ராதாகிருஷ்ணன், தினமும் இரண்டு முறை அந்த அதிகாரியை தனது அறைக்கு அழைப்பார். என்ன ஆச்சு குற்றப் பத்திரிக்கை என்று கேட்பார். அந்த அதிகாரி சார் எவிடென்ஸ் இல்ல சார் என்பா. ஒழுங்கா விசாரிங்க. எவிடென்ஸ் கிடைக்கும் என்பார். இப்படியே 2006 வரை போனது.



ஒரு கட்டத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும், நாஞ்சில் குமரன் தொல்லை பொறுக்க முடியாமல் அந்த அதிகாரி, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பது போல ஒரு அறிக்கையை தருகிறார். ஆட்சி முடிய இரண்டு மாதங்களுக்கு முன் அந்த அறிக்கை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப் படுகிறது.

இந்த ராதாகிருஷ்ணனுக்கு, இதே ஆற்காடு வீராச்சாமி திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் பதவி வாங்கித் தருகிறார். இவர்கள் இருவருக்குமான ஒரே இணைப்புப் பாலம் ”நாயுடு என்ற சாதி”

நாஞ்சில் குமரன் லஞ்ச ஒழிப்புத் தறை இயக்குநராக இருந்த போது எப்படி இருந்தார் தெரியுமா ?



காலையில் அவர் மேசையில் நமது எம்ஜிஆர் பேப்பர் இருக்க வேண்டும். தலைமைச் செயலகத்திற்கு செல்லும் கோப்புகள் அனைத்தும் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையின் பெயர்ப் பலகை பச்சை நிறம். தமிழ்நாட்டில் வனத் துறையை தவிர எந்த அலுவலகத்தின் பெயர்ப்பலகையும் பச்சை நிறத்தில் இருப்பதில்லை என்ற விதியை மீறி பச்சை நிறம்.

தன்னுடைய சன்னல் கண்ணாடிகளைக் கூட நாஞ்சில் குமரன் பச்சை நிறத்தில் மாற்றி தனது அதிமுக விசுவாசத்தை பறைசாற்றினார். இன்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரின் சன்னல் கண்ணடிகள் பச்சை நிறத்தில் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன.

இப்படிப் பட்ட நாஞ்சில் குமரன், தேர்தல் முடிந்த மறுநாள், காலையிலேயே மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். தனது குடும்பமே திமுக குடும்பம் என்றார். சென்னை மாநகர கமிஷனர் ஆனார். எப்பூடி…..

சிவணான்டி. ஜெயலலிதா ஆட்சியில் உளவுத் துறையில் பணியாற்றினாலும் டிஜிபிக்கும் மேல் ஒரு பதவி இருந்தால் என்ன அதிகாரம் இருக்குமோ அப்படி இருந்தார் சிவனாண்டி. சென்னை ஹாடோஸ் சாலையில் 65 லட்ச ரூபாய்க்கு ஒரு Flat வாங்கியதாகவும், ஒரு ஹோண்டா சிட்டி கார் வாங்கியதாகவும் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.

கருணாநிதியே ஒரு கூட்டத்தில் சில அதிகாரிகள், கட்சிக் காரர்கள் போல செயல்படுகிறார்கள் என்று கூறினார். மதிமுக பொதுச் செயலர் வைகோவை, திமுக கூட்டணியிலிருந்து பிரித்து அதிமுக கூட்டணிக்கு சென்று சேர்ப்பதில் பெரும் பங்கு வகித்தார். 

அப்படிப் பட்ட சிவணான்டி, இன்று கருணாநிதி அரசில் சர்வ வல்லமை பொருந்திய அதிகாரி. 

கருணாநிதியின் நள்ளிரவுக் கைதில் முக்கியப் பங்கு வகித்தவர் முத்துக் கருப்பன். இந்த முத்துக் கருப்பன் அவர் செய்த சில முறைகேடுகளால் ஜெயலலிதாவால் இடைநீக்கம் செய்யப் பட்டு, 2006 வரை மீண்டும் பதவிக்கு வர முடியவில்லை.

அப்படிப் பட்ட முத்துக் கருப்பனுக்கு, மீண்டும் பதவி வழங்கியது கருணாநிதிதான். 

2001ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதியப் பட்ட மற்றொரு வழக்கு சென்னை மாநகர் முழுவதும் கழிவு நீர்க் குழாய்களை புதுப்பிப்பது. இதற்காக உலக வங்கி மற்றும் ஜப்பானிய வங்கியிடம் நிதி உதவி பெற்று வேலைகள் நடத்தப் பட்டன.

மாநகராட்சி மற்றும் மெட்ரோ வாட்டர் விதிகளின் படி, சாலையை எங்கு வெட்டினாலும், அதை மூடும் முன், அதில் மணலைக் கொட்டி மூட வேண்டும் என்பது. கழிவு நீர்க் குழாய்கள் அனைத்தையும் மாற்றும் போது ஏராளமான மணலைக் கொட்டி மூடியிருக்க வேண்டும். 

இந்த வேலைகளெல்லாம் முடிந்த பிறகு, மணலை கொட்டி சாலையை மூடியதாக ஆவணங்கள் தயாரிக்கப் பட்டன. ஆனால் ஒரு இடத்தில் கூட மணலைக் கொட்டாமல் கொட்டியதாக போலியாக பட்டியல் தயாரித்து ஊழல் புரிந்ததில் 68 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம்.

இந்த புகாரில் அரசு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிடுகிறது. ஓர் ஆண்டு விசாரணை முடிந்தவுடன், முன்னாள் மாநகர மேயர் மு.க.ஸ்டாலின், சாந்தாஷீலா நாயர், ஜே.ராதாகிருஷ்ணன், கோலப்பன், சி.பி.சிங், ஜோதி.ஜகராஜன், மாலதி, ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய அனுமதி வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார் ராதாகிருஷ்ணன். 

இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, உலக வங்கிக் குழு ஒன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆய்வு மேற்கொள்ள வந்தது. அப்போது ராதாகிருஷ்ணன், இந்த வழக்கு பற்றி பவர்பாயிண்ட் ப்ரசென்டேஷன் ஒன்று தயாரிக்க உத்தரவிட்டார். அந்த ப்ரசென்டேஷனில் இந்த மணல் வழக்கில் 68 கோடி ரூபாய்க்கு பதிலாக 600 கோடி ஊழல் என்று மாற்றச் சொன்னார். எதற்கென்றால், இத்தனை கோடி ரூபாய் ஊழலை கண்டு பிடித்த ராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் நமக்குத் தேவை என்று உலக வங்கி அதிகாரிகள் அழைத்துக் கொள்வார்களோ என்ற ஆதங்கம். அவர் உத்தவவுப் படியே தயாரிக்கப் பட்டது. இதை பார்வையிட்ட அப்போதைய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் நாஞ்சில் குமரன் “யாருய்யா இதை பிரிப்பேர் பண்ணது. கொடுத்த 1000 கோடியில 700 கோடி ஊழல்னா எப்படிய்யா வேர்ல்ட்டு பேங்க்ல லோன் குடுப்பான் ? “ என்று கத்திய போது, ராதாகிருஷ்ணன் அவருக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல உட்கார்ந்திருந்தார்.



பதினைந்து ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அனுமதி கேட்டு அரசுக்கு அனுப்பினால் அனுமதி கிடைக்குமா ? கிடைக்க வில்லை. ஒரு டெக்னிக்கல் கமிட்டி அமைத்து நன்றாக விசாரித்து மீண்டும் ஒரு அறிக்கை அனுப்புமாறு அரசிடமிருந்து பதில் வந்தது. 

இதற்கிடையில் மு.க.ஸ்டாலின் மீது எப்ஐஆர் போட அறிக்கை அனுப்பியது நான்தான் என்று ஜெயலலிதாவிடம் கூறி, மார்க் வாங்காத தனது மகனுக்கு முதல்வர் கோட்டாவில் அண்ணா பல்கலைகழகத்தில் சீட் பெற்றார் ராதாகிருஷ்ணன்.

அரசு உத்தரவுப் படி அமைக்கப் பட்ட டெக்னிக்கல் கமிட்டி மீண்டும் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், பொறியாளர்கள் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

திமுக ஆட்சிக்கு வந்ததும், மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டாம். பொறியாளர்கள் மீது மட்டும் நடவடிக்கை என்று தலைமைச் செயலாளர் திரிபாதி தலைமையிலான மூவர் குழு பரிந்துரை செய்தது. பொறியாளர்கள் சும்மா இருப்பார்களா ? இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் பத்திரிக்கைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகின. 

பம்மிய அரசாங்கம் கடந்த மாதம், பொறியாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கையை கைவிட்டு ஆணை வெளியிட்டது.

மு.க.ஸ்டாலின் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அறிக்கை அளித்த ராதாகிருஷ்ணன், இன்று திமுக ஆட்சியில் பலம் வாய்ந்த அதிகாரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

68 கோடி ரூபாய் ஊழலில் முக்கியப் பங்கு வகித்த மாலதி ஐஏஎஸ், இன்று லஞ்ச ஒழிப்புத் துறையை கட்டுப் படுத்தும் விழிப்புப் பணி ஆணையர்.

68 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் முதல் குற்றவாளியாக லஞ்ச ஒழிப்புத் துறையால் சுட்டிக் காட்டப் பட்ட மு.க.ஸ்டாலின், வழக்கை சந்திக்காமலேயே, தனது அதிகாரத்தால் அந்த வழக்கை மூடி விட்டு, நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்த ஜெயலலிதா, வழக்கை இழுத்தடிக்கிறார் என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். 





இதெல்லாம் தலைகீழ் விகிதங்கலல்லாமல் வேறு என்ன ?



thks
http://www.savukku.net/2010/08/blog-post_04.html